புதுடில்லி: தமிழகத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர் இடம் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் விஜய் அறிவித்திருந்தார்.
அதிமுகவைச் சேர்ந்த சி.வி.சண்முகம் தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததையடுத்து அந்த இடம் காலியாகியுள்ளது. அந்த இடத்திற்கான தேர்தல் ஜூன் 18-ம் தேதி நடைபெற உள்ளது.
தற்போதைய சட்டப்பேரவையில் தவெக அதிக உறுப்பினர்களைக் கொண்டுள்ளதால், அக்கட்சியின் ஆதரவு பெறும் வேட்பாளர் வெற்றி பெறுவது உறுதியாக கருதப்படுகிறது.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்ட அறிவிப்பில், தமிழகத்தில் இருந்து மாநிலங்களவை தேர்தலில் பிரவீன் சக்கரவர்த்தி போட்டியிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.