கோவை: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், போதைப்பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து எழுப்பப்படும் விமர்சனங்களுக்கு பதிலளித்தார்.
அவர் கூறுகையில், “சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட அரசு கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த 20 நாட்களில் என்ன சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டது? போதைப்பொருள் நடமாட்டத்தையும் கட்டுப்படுத்தியுள்ளோம்” என்றார்.
மேலும், “அனைத்து பிரச்னைகளையும் ஒரே நேரத்தில் தீர்க்க முடியாது. ஒவ்வொன்றாகத்தான் செய்ய முடியும். ஆட்சிக்கு வந்த அரசுக்கு குறைந்தபட்சம் ஆறு மாத கால அவகாசம் வழங்க வேண்டும். பல்வேறு குற்றச்சாட்டுகள் எழும்போது அவற்றை எவ்வாறு சரிசெய்வது என்பதை அரசு கவனமாக ஆய்வு செய்து வருகிறது” என தெரிவித்தார்.
அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் தொடங்குவது குறித்த கேள்விக்கு, “ஒவ்வொருவரும் தங்களது விருப்பப்படி இயக்கம் தொடங்குவது ஜனநாயக உரிமை. அந்த உரிமையை அண்ணாமலை பயன்படுத்தியுள்ளார். பாஜகவில் அவருக்கு என்ன வேதனை இருக்கிறது என்பது அவருக்குத்தான் தெரியும். நடப்பதை பொறுத்திருந்து பார்ப்போம்” என்றார்.