சென்னை: கிராம வாழ்க்கையே உண்மையான மகிழ்ச்சியை தரக்கூடியது என்றும், இன்னும் மூன்று ஆண்டுகளில் ஒரு நல்ல கிராமத்தில் குடியேற திட்டமிட்டுள்ளதாகவும் நடிகர் விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்.
இயக்குநர் சசி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நூறு சாமி’ திரைப்படம் வரும் 19-ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் நடித்ததோடு, தயாரிப்பாளராகவும் விஜய் ஆண்டனி செயல்பட்டுள்ளார்.
சென்னையில் நடைபெற்ற படத்தின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய விஜய் ஆண்டனி, படத்தில் விவசாயியாக நடித்த அனுபவம் குறித்த கேள்விக்கு பதிலளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், “எனக்கு மிகவும் பிடித்த வாழ்க்கை எளிமையான வாழ்க்கை. கிராமங்களில் மாலை நேரத்தில் மக்கள் தூங்குவதும், காலையில் கோழி கூவுவதை கேட்பதும் மிகவும் மகிழ்ச்சியான விஷயம். ஆனால் தொழில் காரணமாக தற்போது சென்னையில் இருக்கிறேன்.
இன்னும் மூன்று ஆண்டுகளில், ஸ்ரீதர் வேம்பு சார் எப்படி தென்காசியில் செட்டில் ஆனாரோ அதுபோல் நானும் ஒரு நல்ல கிராமத்தைத் தேர்வு செய்து அங்கு குடியேற திட்டமிட்டுள்ளேன்.
கள்ளக்குறிச்சி பகுதியில் நடந்த படப்பிடிப்பின்போது அங்குள்ள வாழ்க்கையை மிகவும் ரசித்தேன். கிராமங்களில் இயற்கையான காற்று, நல்ல உணவு, நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள். நகரங்களில் அனைவரும் மன அழுத்தத்துடன் தான் வாழ்கிறார்கள். கிராம வாழ்க்கைதான் உண்மையில் சிறந்த வாழ்க்கை” என்றார்.