சென்னை: இயக்குநர் செல்வகுமார் திருமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘டெக்சாஸ் டைகர்’ திரைப்படத்தின் ஆடியோ உரிமையை உலகின் முன்னணி இசை நிறுவனமான சோனி மியூசிக் கைப்பற்றியுள்ளது.
‘பேமிலி படம்’ மூலம் கவனம் பெற்ற இயக்குநர் செல்வகுமார் திருமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய திரைப்படம் ‘டெக்சாஸ் டைகர்’. யுகே ஸ்குவாட் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் ஹிருது ஹரூன், சம்யுக்தா விஸ்வநாதன் மற்றும் ரோகிணி மொல்லேட்டி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ளது. இதையடுத்து, திரைப்படத்தின் ஆடியோ உரிமையை உலகளவில் முன்னணி இசை நிறுவனங்களில் ஒன்றான சோனி மியூசிக் கைப்பற்றியுள்ளது.
இது தொடர்பாக இயக்குநர் செல்வகுமார் திருமாறன் கூறுகையில், “படப்பிடிப்பு நிறைவடைந்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அதைவிட ‘டெக்சாஸ் டைகர்’ படத்துடன் சோனி மியூசிக் இணைந்திருப்பது எங்களுக்கு பெருமையான தருணம். நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினரின் உழைப்பிற்குக் கிடைத்த அங்கீகாரமாக இதைப் பார்க்கிறோம். வரும் மாதங்களில் ரசிகர்கள் இந்தப் படத்தின் இசையையும் அதன் உலகத்தையும் ரசிப்பார்கள் என்று நம்புகிறோம்” என்றார்.
படத்தின் இசை மற்றும் பிற முக்கிய அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.