சென்னை: விஜய் சேதுபதி – மிஷ்கின் கூட்டணியில் உருவாகியுள்ள ‘ட்ரெயின்’ திரைப்படம், நடிகரின் திரைப்பயணத்தில் சிறந்த ஆக்ஷன் படமாக அமையும் என்று தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தெரிவித்துள்ளார்.
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள திரைப்படம் ‘ட்ரெயின்’. இந்தப் படத்தில் ஸ்ருதி ஹாசன், நாசர், நரேன், கே.எஸ். ரவிக்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு மற்றும் பின்னணி பணிகள் நிறைவடைந்துள்ளன. இருப்பினும் வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இது தொடர்பாக பேசிய தயாரிப்பாளர் தாணு, “படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்துவிட்டன. படம் முழுவதும் ரெயிலை மையமாகக் கொண்ட கதை என்பதால், சிஜிஐ பணிகளுக்காக கூடுதல் நேரம் தேவைப்பட்டது. தற்போது வெளியீட்டிற்கான நல்ல தேதியைத் தேர்வு செய்து வருகிறோம்” என்றார்.
மேலும், “விஜய் சேதுபதியின் திரைப்பயணத்தில் மிகச்சிறந்த ஆக்ஷன் திரைப்படங்களில் ஒன்றாக ‘ட்ரெயின்’ இருக்கும். படத்தில் இடம்பெற்றுள்ள சண்டைக் காட்சிகள் ஹாலிவுட் தரத்தில் உருவாக்கப்பட்டுள்ளன. ரசிகர்களுக்காக படத்தின் மேக்கிங் வீடியோவும் வெளியிடப்படும்” என தெரிவித்தார்.