சென்னை: ஜூன் 12-ஆம் தேதி வெளியாக உள்ள ‘மூன்றாம் கண்’ திரைப்படம் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் என நடிகர் விதார்த் தெரிவித்துள்ளார்.
அறிமுக இயக்குநர் சகோ கணேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள க்ரைம் திரில்லர் திரைப்படம் ‘மூன்றாம் கண்’. ஹைபர்லிங்க் ஆந்தாலஜி வடிவில் உருவாகியுள்ள இப்படத்தில் விதார்த், கலையரசன், த்ரிகுண் மற்றும் சந்தோஷ் பிரதாப் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
டிரெண்டிங் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஒயிட் ஹார்ஸ் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு, சூப்பர் சிங்கர் புகழ் அஜீஸ் இசையமைத்துள்ளார்.
பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய நடிகர் விதார்த், “இந்தப் படத்தில் எனக்கு வசனங்கள் மிகவும் குறைவு. உணர்வுகளை மட்டும் வெளிப்படுத்துவது சவாலான அனுபவமாக இருந்தது. இயக்குநர் சகோ கணேசன் அளித்த நம்பிக்கையால் அந்தக் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்ய முடிந்தது” என்றார்.
மேலும், தயாரிப்பாளர் சசிகுமார் குறித்து பாராட்டிய அவர், “படம் முடிவதற்கு முன்பே நடிகர்களின் சம்பளத்தை வழங்கி அனைவரையும் அக்கறையுடன் கவனிக்கும் தயாரிப்பாளர் மிகவும் அரிது” என கூறினார்.
ஜூன் 12-ஆம் தேதி திரைக்கு வர உள்ள இந்தப் படம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.