சென்னை: விவாகரத்து வழக்கு தொடர்பாக ஊடகங்களில் கருத்து தெரிவித்ததற்காக சென்னை உயர்நீதிமன்றத்தில் அளித்த உத்தரவாதத்தின்படி நடிகர் ரவி மோகன் பொது மன்னிப்பு கோரியுள்ளார்.
நடிகர் ரவி மோகனும் அவரது மனைவி ஆர்த்தியும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இருவருக்கும் இடையிலான விவாகரத்து வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்த விவகாரத்தில் பாடகி கெனிஷா தொடர்புடையவர் என்ற தகவல்கள் பரவிய நிலையில், அதுகுறித்து பல்வேறு சர்ச்சைகளும் எழுந்தன. கடந்த மாதம் செய்தியாளர்களைச் சந்தித்த ரவி மோகன், தனது குடும்ப வாழ்க்கை தொடர்பாக பல கருத்துகளை வெளியிட்டிருந்தார். ஆனால், விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ளதால் இரு தரப்பினரும் பொதுவெளியில் கருத்து தெரிவிக்கக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவை மீறி ரவி மோகன் ஊடகங்களுக்கு பேட்டி அளித்ததாக ஆர்த்தி தரப்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, ரவி மோகன் தரப்பில் நீதிமன்றத்தில் பொது மன்னிப்பு கோரி அறிவிப்பு வெளியிடத் தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, நீதிமன்றத்தில் அளித்த உறுதியின்படி, ஊடகங்களில் கருத்து தெரிவித்ததற்காக மனப்பூர்வமாக மன்னிப்பு கோருவதாகவும், இதனால் மனவேதனை அடைந்த அனைவரிடமும் வருத்தம் தெரிவிப்பதாகவும் அவர் பொது அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இந்த மன்னிப்பு ஆவணத்தையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.