சென்னை:உலகின் முன்னணி இசைக்குழுக்களில் ஒன்றான லண்டன் சிம்பொனி ஆர்கெஸ்ட்ராவுடன் தனது முதல் சிம்பொனியை பதிவு செய்துள்ளதாக இசைக் கலைஞர் லிடியன் நாதஸ்வரம் அறிவித்துள்ளார்.
‘தி வேர்ல்ட்ஸ் பெஸ்ட்’ நிகழ்ச்சியில் வெற்றி பெற்று உலகளவில் கவனம் பெற்ற இசைக் கலைஞர் லிடியன் நாதஸ்வரம், தனது இசைப் பயணத்தில் மற்றொரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளார்.
கடந்த ஆண்டு 1330 திருக்குறள்களையும் இசை வடிவில் தொகுத்து ‘குறளிசைக்காவியம்’ என்ற தலைப்பில் வெளியிட்டிருந்த லிடியன், தற்போது தனது முதல் சிம்பொனியை பதிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.
‘நியூ பிகினிங்க்ஸ்’ என்ற தலைப்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்த சிம்பொனி, நான்கு விதமான உணர்வுகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தனது சமூக வலைதளப் பதிவில், “உலகிற்கு எனது முதல் சிம்பொனியை வழங்குவதில் பெருமையும் பணிவும் கொள்கிறேன். உண்மையான தரவுகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட சுயமான சிம்பொனியை பதிவு செய்த மிக இளம் இந்திய மற்றும் ஆசிய இசையமைப்பாளர்களில் ஒருவராக அங்கீகரிக்கப்பட்டுள்ளேன்.
புகழ்பெற்ற மேட் டங்க்லி தலைமையில், உலகின் தலைசிறந்த இசைக்குழுக்களில் ஒன்றான லண்டன் சிம்பொனி ஆர்கெஸ்ட்ரா இந்த சிம்பொனியை வாசித்து பதிவு செய்துள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.
இந்த சிம்பொனியின் முதல் அரங்கேற்றம் மற்றும் அதிகாரப்பூர்வ வெளியீடு உலக இசை தினமான ஜூன் 21-ஆம் தேதி சென்னை மியூசிக் அகாடமியில் நடைபெற உள்ளது. அதே நாளில் அனைத்து முக்கிய இசை ஸ்ட்ரீமிங் தளங்களிலும் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.