சென்னை: பேட்மிண்டன் விளையாட்டை மையமாகக் கொண்ட ‘ரீமேட்ச்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வெற்றிகரமாக பயணித்து வரும் கேபிஒய் பாலா, தனது வருமானத்தின் ஒரு பகுதியை சமூக சேவைக்காக செலவிட்டு பலரது பாராட்டையும் பெற்று வருகிறார்.
‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பாலா, தற்போது கதாநாயகனாக ‘ரீமேட்ச்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். அறிமுக இயக்குநர் விமல் குமார் இயக்கும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் ஆர்யா வெளியிட்டிருந்தார்.
பாலாவுடன் சந்தோஷ் பிரதாப், தனு ஹர்ஷா மற்றும் செல் முருகன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அச்சு ராஜாமணி இசையமைக்கும் இப்படம், பேட்மிண்டன் விளையாட்டை மையமாகக் கொண்ட காதல் கதையாக உருவாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் பேட்மிண்டன் விளையாட்டை மையமாகக் கொண்டு உருவாகும் முதல் ஸ்போர்ட்ஸ் திரைப்படம் என்ற பெருமையையும் ‘ரீமேட்ச்’ பெற்றுள்ளது. இந்நிலையில் படப்பிடிப்பு வீடியோ வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.