சென்னை: திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடுவதாக வெளியான தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ஜூன் 11-ம் தேதி முக்கிய அறிவிப்பு வெளியாகும் என ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ், திருச்சி கிழக்கு தொகுதி தேர்தலில் போட்டியிட உள்ளதாக சமூக வலைதளங்களிலும் சில ஊடகங்களிலும் தகவல்கள் வெளியாகின.
இதுகுறித்து விளக்கம் அளிக்கும் வகையில் தனது எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்டுள்ள ராகவா லாரன்ஸ், “நான் தேர்தலில் போட்டியிடப் போவதாக பல்வேறு செய்திகள் வெளியாகி வருகின்றன. இது தொடர்பாக பலரும் என்னிடம் விளக்கம் கேட்டு வருகின்றனர். இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பது அவசியமாகியுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “எனது தாயாரின் ஆசியுடன், எனது வாழ்க்கையின் மிக முக்கியமான முடிவு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஜூன் 11-ம் தேதி காலை 9.30 மணிக்கு வெளியாகும்” என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு ரசிகர்கள் மற்றும் அரசியல் வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.