சென்னை: நடிகர் அஜித் குமார், தனது கார் பந்தய அணியுடன் அடுத்த ஆண்டுக்கான சர்வதேச ரேசிங் திட்டங்களை தீவிரமாகத் தயாரித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார், நடிகராக மட்டுமல்லாமல் கார் பந்தய வீரராகவும் தனது திறமையை நிரூபித்து வருகிறார். ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்திற்கு பிறகு கார் ரேசிங்கில் முழு கவனம் செலுத்தி வரும் அவர், ‘அஜித்குமார் ரேசிங்’ என்ற தனது சொந்த பந்தய அணியை தொடங்கி பல சர்வதேச போட்டிகளில் பங்கேற்று வெற்றிகளை குவித்து வருகிறார்.
துபாய், பெல்ஜியம், ஸ்பெயின் மற்றும் அபுதாபி உள்ளிட்ட நாடுகளில் நடைபெற்ற பல்வேறு கார் பந்தய தொடர்களில் அவரது அணி பரிசுகளை வென்றுள்ளது. தற்போது பிரான்சில் நடைபெற உள்ள முக்கியமான கார் ரேசிங்கிற்காக அவர் தீவிரமாக தயாராகி வருகிறார்.
சமீபத்திய பேட்டியில் பேசிய அஜித் குமார், “எனது அணியின் மெக்கானிக்குகள், பொறியாளர்கள் மற்றும் வீரர்கள் அனைவரும் எனது இரண்டாவது குடும்பம் போன்றவர்கள். கடந்த மூன்று ஆண்டுகளாக துபாயை மையமாகக் கொண்டு வசித்து வருகிறேன். பந்தயத் தொடருக்காக ஐரோப்பாவில் அதிக நேரம் செலவிட வேண்டியுள்ளது” என்றார்.
மேலும், அடுத்த ஆண்டிற்கான திட்டங்கள் குறித்து பேசிய அவர், “ஏசியன் லெ மான்ஸ் மற்றும் இ.எல்.எம்.எஸ். தொடர்களில் பங்கேற்க திட்டமிட்டுள்ளோம். என்னால் முடிந்தவரை தொடர்ந்து கார் பந்தயங்களில் பங்கேற்க விரும்புகிறேன்” என்று தெரிவித்தார்.