புதுடில்லி: ஓமன் வளைகுடாவில் இந்திய மாலுமிகள் பயணித்த வணிகக் கப்பல் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
ஓமன் வளைகுடா பகுதியில் கடந்த நான்கு நாட்களில் மூன்றாவது முறையாக வணிகக் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எம்டி ஜல்வீர் என்ற கப்பலின் எஞ்சின் அறை மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த கப்பல் ஈரானில் இருந்து எண்ணெய் கொண்டு வந்ததாக அமெரிக்க தரப்பு குற்றம்சாட்டியுள்ளது. முன்னதாக தாக்கப்பட்ட மற்றொரு கப்பலில் இருந்த 21 இந்திய மாலுமிகள் மீட்கப்பட்ட நிலையில், 3 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவங்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அமெரிக்காவின் இந்தியப் பொறுப்பு தூதர் ஜேசன் மீக்ஸை இந்தியா மீண்டும் அழைத்து விளக்கம் கேட்டுள்ளது.