வயநாடு : கேரள மாநிலம் வயநாட்டில் ஷிகெல்லா நோய்த்தொற்று மீண்டும் பரவத் தொடங்கியுள்ளதால் பள்ளிகளுக்கு தற்காலிக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பற்ற குடிநீர் மற்றும் சுகாதார குறைபாடுகளால் பரவும் ஷிகெல்லா நோய், கேரளாவில் மீண்டும் கவலை அளிக்கும் வகையில் பரவி வருகிறது. வயநாடு மாவட்டத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில் நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
பள்ளி வளாகத்தில் உள்ள கிணற்றில் பாக்டீரியா இருப்பதை சுகாதாரத்துறை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இதனால் 16 மாணவர்கள் நோய் அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் மாநிலம் முழுவதும் 126-க்கும் மேற்பட்ட புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளன. வயநாடு, கோழிக்கோடு, திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இரத்தம் மற்றும் சளியுடன் கூடிய வயிற்றுப்போக்கு, கடுமையான வயிற்றுவலி, காய்ச்சல் மற்றும் வாந்தி போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவமனையை அணுக வேண்டும் என மருத்துவ அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.