சென்னை: வீட்டுத் தோட்டத்தில் கேட்கும் பறவைகளின் சத்தங்கள், மனதிற்குள் ஒரு தனி அமைதியையும், புத்துணர்ச்சியையும் தரும். பறவைகள் அழகிற்கு மட்டுமல்ல, உங்கள் தோட்டத்தில் உள்ள பூச்சிகளை கட்டுப்படுத்தவும் பெரிதும் உதவுகின்றன.
உங்கள் வீட்டுத் தோட்டத்தில் பறவைகளின் வரத்து குறைவாக இருந்தால், கவலைப்படாதீர்கள்! வீட்டு தோட்டத்தை பறவைகளின் நந்தவனமாக மாற்ற உதவும் எளிய வழிகளை இங்கு பார்க்கலாம்
பறவைகளுக்கு குடிப்பதற்கும், குளிப்பதற்கும் சுத்தமான தண்ணீர் மிகவும் அவசியம். குறிப்பாக கோடை காலத்தில் வீட்டு தோட்டத்தில் ஒரு சிறிய ஆழமில்லாத பறவைக் குளியல் தொட்டி அல்லது சிறிய பாத்திரத்தில் தண்ணீர் வைக்கலாம். பாசி மற்றும் பாக்டீரியாக்கள் சேராமல் இருக்க, தினமும் தண்ணீரை மாற்றி பாத்திரத்தை சுத்தமாக வைத்திருப்பது முக்கியம்.
உள்நாட்டு செடிகள்தான் பறவைகளை இயற்கையாகவே ஈர்க்கும் சிறந்த வழி. இவை பழங்கள், விதைகள் மற்றும் பூச்சிகளை வழங்குவதால் பறவைகளுக்கு இயற்கையான உணவாக அமைகின்றன. மேலும், நிழல் மற்றும் பாதுகாப்பையும் வழங்குகின்றன.
பறவைகள் மட்டுமின்றி, வண்ணத்துப்பூச்சிகளையும் உங்கள் தோட்டத்திற்கு வரவழைத்து, தோட்டத்தின் அழகை கூட்டுகின்றன. தோட்டத்தில் ஆங்காங்கே தானியங்கள், விதைகள் அல்லது நட்ஸ் வைக்கக்கூடிய அழகான உணவுத் தட்டுகளைத் தொங்கவிடலாம். இவை பல வகையான பறவைகள் தோட்டத்திற்கு வரக்கூடும். இவற்றை பூனைகள் போன்ற பிற விலங்குகளிடம் இருந்து பாதுகாப்பான உயரத்தில் வைப்பது அவசியம். மேலும், நோய்த்தொற்று பரவாமல் இருக்க அடிக்கடி சுத்தப்படுத்த வேண்டும்.