டெல்லி: தலைநகர் டெல்லியில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டதாகக் கூறப்படும் 7 பேரை டெல்லி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
டெல்லியில் பயங்கரவாத தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக போலீஸ் உளவுப்பிரிவுக்கு கிடைத்த ரகசிய தகவலைத் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.
இந்த சோதனையின் போது அனிஸ் தியாகி, மோகித், தீபக் அக்ரோலா, ஆசிப், ஜதன், சபீர் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர். விசாரணையில், பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ மூலம் ஆயுதங்கள் மற்றும் நிதியுதவி வழங்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், டெல்லியில் தாக்குதல் நடத்த திட்டமிட்டதும் கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து பல்வேறு வகையான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவை பஞ்சாப் எல்லை வழியாக இந்தியாவிற்குள் கடத்தப்பட்டதாகவும், அதனுடன் போதைப்பொருட்களும் கொண்டு வரப்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.