சென்னை: தமிழகத்தின் 7 மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய கனமழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய மேற்கு வங்கக்கடல் முதல் கேரள கடலோரப் பகுதிகள் வரை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியில் 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இந்நிலையில், நீலகிரி, திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, தஞ்சாவூர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்று சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், பலத்த காற்றும் வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதேசமயம் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் வரை பதிவாக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.