சிம்லா: இமாச்சல பிரதேசத்தில் கடந்த 43 நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட பல்வேறு விபத்துகளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 70 ஆக அதிகரித்துள்ளது. மழை மற்றும் வெள்ளத்தால் மாநிலத்தில் சுமார் ரூ.910 கோடி மதிப்பிலான பொதுச் சொத்துகள் சேதமடைந்துள்ளன.
மாநிலத்தில் ஒரு மாதத்துக்கும் மேலாக கனமழை நீடித்து வரும் நிலையில், மழை தொடர்பான விபத்துகளில் இதுவரை 70 பேர் உயிரிழந்துள்ளதாக மாநில அவசரகால கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
மாவட்ட வாரியாக பார்க்கும்போது, லஹால் மற்றும் ஸ்பிட்டி மாவட்டங்களில் தலா 14 பேரும், காங்க்ரா மாவட்டத்தில் 12 பேரும் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து பெய்து வரும் மழையால் சாலைகள், பாலங்கள், மின்கட்டமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு பொதுச் சொத்துகள் கடுமையாக சேதமடைந்துள்ளன.
இதில் பொதுப்பணித் துறைக்கு மட்டும் ரூ.686 கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், மின் துறையில் ரூ.203 கோடி மதிப்பிலான சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ரூ.910 கோடி அளவுக்கு பொதுச் சொத்துகள் பாதிக்கப்பட்டுள்ளன.
மேலும், என்.எச்.-154 மற்றும் என்.எச்.-21 ஆகிய இரண்டு தேசிய நெடுஞ்சாலைகளும் மழை பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. தொடர்ந்து மழை பெய்து வருவதால் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
