மணிப்பூர்: தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளம் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஏஞ்சலின் ரெனிட்டா, மணிப்பூர் மாநிலத்தின் காக்சிங் மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்று சாதனை படைத்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள மைக்கேல்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆர். ஏஞ்சலின் ரெனிட்டா. 28 வயதான இவர் பள்ளிப் படிப்பை தமிழ் வழிக் கல்வியில் பயின்றார். பின்னர் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி பொறியியல் கல்லூரியில் வேளாண்மை மற்றும் நீர்ப்பாசன பொறியியல் படிப்பில் சேர்ந்து தங்கப்பதக்கம் வென்றார்.
சிறு வயது முதலே ஐ.ஏ.எஸ். அதிகாரியாக வேண்டும் என்ற லட்சியத்துடன் செயல்பட்ட அவர், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய 2022-ம் ஆண்டு குடிமைப் பணிகள் தேர்வில் முதல் முயற்சியிலேயே அகில இந்திய அளவில் 338-வது இடம் பிடித்தார்.
இதையடுத்து ஐ.ஏ.எஸ். அதிகாரியாக தேர்வு செய்யப்பட்ட அவர், மணிப்பூர் மாநில கேடரில் பணியாற்றத் தொடங்கினார். அங்கு உள்துறை இணை செயலாளர், லம்பேல் துணைப் பிரிவு அதிகாரி, மணிப்பூர் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க திட்ட இயக்குநர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளில் பணியாற்றினார்.
அவரது நிர்வாகத் திறமையை பாராட்டி தற்போது காக்சிங் மாவட்டத்தின் துணை ஆணையர் மற்றும் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் மணிப்பூர் மாநிலத்தின் இளம் வயது மாவட்ட கலெக்டர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
தமிழ் வழியில் படித்து, முதல் முயற்சியிலேயே ஐ.ஏ.எஸ். தேர்ச்சி பெற்று, இளம் வயதில் மாவட்ட ஆட்சியராக உயர்ந்துள்ள ஏஞ்சலின் ரெனிட்டாவுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
