திருச்சி: 2021-ம் ஆண்டு முதல் விவசாயிகள் பெற்றுள்ள அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்து விவசாயிகளை பாதுகாக்க வேண்டும் என தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு வலியுறுத்தியுள்ளார்.
திருச்சி அண்ணாமலை நகரில் உள்ள சங்க அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில தலைவர் அய்யாக்கண்ணு கலந்து கொண்டு விவசாயிகளின் பிரச்னைகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தலுக்கு முன்பு சிறு, குறு விவசாயிகளின் அனைத்து கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என்றும், பெரிய விவசாயிகளின் கடன்களில் 50 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும் என்றும் வாக்குறுதி அளிக்கப்பட்டதாக தெரிவித்தார்.
கர்நாடகா உரிய காவிரி நீரை திறக்காததால் குருவை சாகுபடி பாதிக்கப்பட்டு 10 லட்சம் ஏக்கர் நிலங்கள் வீணாகியுள்ளதாகவும், சம்பா சாகுபடியை தொடங்க முடியாத அளவுக்கு வறட்சி நிலவுவதாகவும் அவர் கூறினார்.
காவிரி விவகாரத்தில் தமிழக விவசாயிகளுக்கு ரூ.1 லட்சம் கோடி இழப்பீடு பெற்றுத்தர வேண்டும் எனக் கோரி குடியரசுத் தலைவரை சந்திக்க உள்ளதாகவும் தெரிவித்தார். செப்டம்பர் 1-ம் தேதி திருச்சியிலிருந்து புறப்பட்டு, செப்டம்பர் 4-ம் தேதி டெல்லியில் குடியரசுத் தலைவரை சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.
மேலும், அனைத்து விவசாய சங்கத் தலைவர்களையும் அழைத்து திருச்சியில் ஆலோசனைக் கூட்டம் நடத்த உள்ளதாக அய்யாக்கண்ணு தெரிவித்தார்.
