சென்னை: 2047-ம் ஆண்டிற்குள் தென்னிந்திய மாநிலங்களின் ஒட்டுமொத்த பொருளாதாரம் 10 டிரில்லியன் அமெரிக்க டாலரை எட்டும் திறன் கொண்டது என்றும், இதற்கு மாநிலங்களுக்கிடையேயான கூடுதல் ஒத்துழைப்பு அவசியம் என்றும் ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
மகாபலிபுரத்தில் நடைபெற்ற தென்மண்டலக் கவுன்சில் கூட்டத்தில் பேசிய அவர், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தென்னிந்திய மாநிலங்கள் சுமார் 31 சதவீதம் பங்களிப்பதாகக் குறிப்பிட்டார்.
ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டை இணைக்கும் வகையில் புல்லட் ரயில் வழித்தடம் அமைக்க வேண்டும் என்றும், அமராவதி, பெங்களூரு மற்றும் சென்னை நகரங்களை இணைக்கும் போக்குவரத்து கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
தென்னிந்திய மாநிலங்களுக்கு பொதுவான சரக்குப் போக்குவரத்து வலையமைப்பு, உலர் துறைமுகங்கள் மற்றும் வலுவான மின் இணைப்பு ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.
மேலும், கோதாவரி-காவிரி நதிநீர் இணைப்பின் மூலம் தமிழகத்தின் நதிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என்றும், தென் மாநிலங்கள் ஒருங்கிணைந்து நதிநீர் விவகாரங்களை அணுக வேண்டும் என்றும் சந்திரபாபு நாயுடு வலியுறுத்தினார்.
