ஜெருசலேம்: தனது மகன்களில் ஒருவரை ஈரான் அரசு குறிவைத்து படுகொலை செய்ய முயன்றதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குற்றம்சாட்டியுள்ளார்.
இஸ்ரேல் தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு தொலைபேசி வாயிலாக அளித்த பேட்டியில் நெதன்யாகு இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
அப்போது அவர் கூறுகையில், ஈரான் அரசு தனது மகன்களில் ஒருவரை இலக்காகக் கொண்டு படுகொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் நடந்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும், இஸ்ரேலில் நடைபெற உள்ள தேர்தலில் போட்டியிடும் முன்னாள் ராணுவத் தலைவர் காடி ஐசன்கோட்டுக்கு உள்நாட்டுப் பாதுகாப்பு முகமை 24 மணி நேர பாதுகாப்பை தொடர்ந்து வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
“இது ஆடம்பரமான பாதுகாப்பு அல்ல. பாதுகாப்பு வழங்கப்படாவிட்டால் ஈரானின் சதித்திட்டங்கள் வெற்றி பெறும்” என நெதன்யாகு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
நெதன்யாகுவுக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ள நிலையில், ஈரானால் எந்த மகன் குறிவைக்கப்பட்டார், இந்த சம்பவம் எப்போது நடைபெற்றது என்பது தொடர்பான கூடுதல் விவரங்களை அவர் வெளியிடவில்லை.
இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே ஏற்கனவே கடுமையான பதற்றம் நிலவி வரும் சூழலில், நெதன்யாகுவின் இந்த குற்றச்சாட்டு சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.
