பீஜிங்: சீன தலைநகர் பீஜிங்கில் 16 வயது இரட்டை சகோதரிகள் பரதநாட்டிய அரங்கேற்றம் செய்து பார்வையாளர்களின் பாராட்டை பெற்றுள்ளனர்.
சீனாவைச் சேர்ந்த ஜின் யான்ஷு மற்றும் ஜின் யனாய் ஆகிய இருவரும் திரளான பார்வையாளர்கள் முன்னிலையில் பரதநாட்டிய அரங்கேற்றத்தை நிகழ்த்தினர். இந்திய பாரம்பரிய நடனத்தை அவர்கள் சிறப்பாக வெளிப்படுத்திய விதம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
நாடுகளைக் கடந்த கலைப் பரிமாற்றத்தின் அழகான வெளிப்பாடாக இந்த நிகழ்ச்சி அமைந்தது. சீனாவுக்கான இந்திய தூதர் விக்ரம் துரைசாமி மற்றும் அவரது மனைவி சங்கீதா துரைசாமி நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி, இரட்டை சகோதரிகளை பாராட்டினர்.
இருவரும் தங்களது 3-வது வயதிலேயே பரதநாட்டியம் கற்கத் தொடங்கியுள்ளனர். பீஜிங்கில் ‘சங்கீதம் இந்திய கலை பள்ளி’யை நடத்தி வரும் சீன பரதநாட்டியக் கலைஞர் ஜின் ஷான் ஷானிடம் அவர்கள் தொடர்ந்து பயிற்சி பெற்றுள்ளனர்.
ஜின் ஷான் ஷான் சென்னையில் உள்ள கலாஷேத்ராவில், பிரபல நடனக் கலைஞர் லீலா சாம்சனிடம் பரதநாட்டியம் பயின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே இந்த இரட்டை சகோதரிகள், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாட்டில் பங்கேற்க சென்றிருந்த பிரதமர் மோடியின் முன்னிலையிலும் பரதநாட்டியம் ஆடியுள்ளனர். மேலும், பீஜிங்கில் நடைபெற்ற ராமாயண நடன நாடக தயாரிப்பிலும் பங்கேற்றுள்ளனர்.
சீனாவில் இந்திய பாரம்பரியக் கலையான பரதநாட்டியத்தை சிறப்பாகக் கற்றுத் தேர்ந்து, இரட்டை சகோதரிகள் அரங்கேற்றம் செய்திருப்பது இரு நாடுகளுக்கு இடையிலான கலாச்சார உறவின் சிறப்பான வெளிப்பாடாக பார்க்கப்படுகிறது.
