அலங்காநல்லூர்: மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே ஆசிரியர் திட்டியதாக கூறப்படும் நிலையில், 11-ம் வகுப்பு மாணவி ஒருவர் தூக்கிட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமயநல்லூர் பகுதியைச் சேர்ந்த 16 வயது மாணவி, அலங்காநல்லூர் அருகே உள்ள பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். அவரை ஆங்கில ஆசிரியர் சில நாட்களுக்கு முன்பு திட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த மாணவி வீட்டில் தூக்கிட்டு உயிரிழந்ததாக கூறப்படுகிறது. தகவலறிந்த சமயநல்லூர் போலீஸார் மாணவியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மாணவி உயிரிழப்பதற்கு முன்பு பெற்றோருக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதி வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே, மாணவி 10-ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்றிருந்த நிலையில், தற்போது படிப்பில் பின்தங்கியிருந்ததாகவும், சக மாணவர் ஒருவரின் பெயரை நோட்டுப் புத்தகத்தில் எழுதி வைத்திருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக ஆசிரியர் மற்றும் பெற்றோர் மாணவியை கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த காரணங்களால் மாணவி தற்கொலை முடிவை எடுத்தாரா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, மாணவியின் உறவினர்கள் நூற்றுக்கணக்கானோர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பந்தப்பட்ட ஆசிரியரை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
மாணவியின் உயிரிழப்புக்கான உண்மையான காரணம் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்றும் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தற்கொலை எந்தப் பிரச்சினைக்கும் தீர்வல்ல. தற்கொலை எண்ணங்கள் ஏற்பட்டால் நம்பிக்கைக்குரியவர்களிடம் உடனடியாக பேசுவதுடன், சினேகா தற்கொலைத் தடுப்பு உதவி எண்ணான 044-24640060 அல்லது தமிழக அரசின் 104 உதவி எண்ணை தொடர்புகொண்டு ஆலோசனை பெறலாம்.
