சீனா: நேபாளம்–திபெத் எல்லைப் பகுதியில் நிலச்சரிவால் உருவான தற்காலிக ஏரி அடுத்த 72 மணி நேரத்துக்குள் உடைந்து மீண்டும் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக சீனா எச்சரித்துள்ளது.
நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தைத் தொடர்ந்து, சோசென் கோலா மற்றும் புரேபு சாங்போ ஆறுகள் சங்கமிக்கும் பகுதியில் நிலச்சரிவால் நீரோட்டம் தடுக்கப்பட்டு தற்காலிக ஏரி உருவாகியுள்ளது.
நிலச்சரிவால் உருவாகும் இதுபோன்ற நீர்த்தேக்கம் ‘நிலச்சரிவு அணை’ என அழைக்கப்படுகிறது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்தால், மண் மற்றும் பாறைகளால் உருவான இந்தத் தடுப்பு உடைந்து திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது.
இந்த தற்காலிக ஏரியில் தற்போது சுமார் 2 மில்லியன் கன மீட்டர் தண்ணீர் தேங்கியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அடுத்த மூன்று நாட்களில் சுமார் 3 மில்லியன் கன மீட்டர் தண்ணீர் கூடுதலாக வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுவதால், அணை உடையும் அபாயம் அதிகரித்துள்ளதாக சீன நீர்வளத்துறை தெரிவித்துள்ளது.
தடுப்பு உடைந்தால் நேபாளத்தின் போதேகோஷி மற்றும் திரிசூலி ஆற்றங்கரைப் பகுதிகளில் மீண்டும் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இமயமலைப் பகுதியில் ஏற்பட்ட பனிப்பாறை சரிவு, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் 350-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், நேபாளம் மற்றும் திபெத் எல்லையின் இருபுறமும் 1,300-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
