சென்னை: அரிசி, பருப்பு, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், அத்தியாவசிய மளிகைப் பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக தெரிவித்துள்ளார். வருமானம் உயராத நிலையில், உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களுக்கான செலவு மட்டும் அதிகரித்து வருவதால் சாமானிய மக்கள் குடும்பச் செலவுகளை சமாளிக்க முடியாமல் தவித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக ஏழை மற்றும் நடுத்தர மக்களின் மாத வருமானத்தில் பெரும் பகுதி உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கே செலவாகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இதனை சாதாரண விலை உயர்வாக கருதாமல் மக்களின் வாழ்வாதாரத்துடன் தொடர்புடைய முக்கியப் பிரச்சினையாக தமிழக அரசு அணுக வேண்டும்.
அத்தியாவசியப் பொருட்களின் விலையை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு, பொருளாதார நெருக்கடியின்றி மக்கள் நிம்மதியாகவும் கண்ணியமாகவும் வாழும் சூழலை அரசு உருவாக்க வேண்டும் என பிரேமலதா கேட்டுக்கொண்டுள்ளார்.
