சென்னை: பரபரப்பான அரசியல் சூழலில், தவெக தரப்பைச் சேர்ந்த சில அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் விஜய்தான் அடுத்த பிரதமர் என்றும், அவர் இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக வேண்டும் என்றும் தொடர்ந்து கூறி வருவது கூட்டணிக்குள் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ. தாரகை கத்பட்டிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “எந்த கட்சித் தொண்டர்களாக இருந்தாலும் தங்களது தலைவர்கள்தான் பிரதமராக வேண்டும் என விரும்புவார்கள். அந்த வகையில் தவெக தொண்டர்களும் தங்களது தலைவரை பிரதமராக கூறுகின்றனர்” என்றார்.
மேலும், “முதல்வர் விஜய் என்ன கூறியிருக்கிறார் என்பதுதான் முக்கியம். முதல்வர் விஜய் ராகுல் காந்தியைத்தான் பிரதமர் வேட்பாளராக தேர்ந்தெடுத்திருக்கிறார். அதன்படியே அவர் சென்று கொண்டிருக்கிறார்” என தாரகை கத்பட் தெரிவித்தார்.
தவெக கட்சியின் தலைமை தரப்பில் விஜய்தான் பிரதமர் வேட்பாளர் என எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்றும், கட்சித் தலைமையின் நிலைப்பாடு ராகுல் காந்திதான் பிரதமர் என்பதாக உள்ளது என்றும் அவர் கூறினார்.
கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் தொடர்பாக தொண்டர்கள் பல்வேறு கருத்துகளை தெரிவிப்பது இயல்பானது. ஆனால், கட்சியின் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டை தலைமையே அறிவிக்கும் எனவும் தாரகை கத்பட் தெரிவித்தார்.
