சென்னை: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி திரைப் பிரபலங்களின் போலி புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் விளம்பரங்கள் உருவாக்கப்படுவது அதிகரித்து வரும் நிலையில், நடிகை ஸ்ருதிஹாசனும் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
குறிப்பாக நடிகைகளின் டீப் ஃபேக் வீடியோக்கள் மற்றும் பிரபலங்களின் புகைப்படங்களை அனுமதியின்றி பயன்படுத்தி போலி விளம்பரங்கள், வணிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன.
இதனால் பல திரைப் பிரபலங்கள் தங்களது பெயர், புகைப்படம் மற்றும் தோற்றத்தை அனுமதியின்றி பயன்படுத்துவதைத் தடுக்க நீதிமன்றத்தை நாடி வருகின்றனர். நடிகர்கள் மற்றும் நடிகைகள் சிலர் இதுதொடர்பாக தடை உத்தரவுகளையும் பெற்றுள்ளனர்.
அந்த வகையில் நடிகை ஸ்ருதிஹாசன் மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். தனது புகைப்படத்தை அனுமதியின்றி பயன்படுத்தி டீப் ஃபேக் வீடியோக்கள் மற்றும் போலி விளம்பரங்களை உருவாக்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தன்னைப் பற்றிய போலி வீடியோக்கள் மற்றும் விளம்பரங்களை இணையத்தில் இருந்து அகற்ற உத்தரவிட வேண்டும் என்றும் அவர் தனது மனுவில் கோரியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வளர்ந்து வரும் நிலையில், பிரபலங்களின் முகம் மற்றும் குரலைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் போலி உள்ளடக்கங்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
