புதுடெல்லி: தனது உதவியாளர் தொடர்பான பணம் மற்றும் தேர்வு முறைகேடு குற்றச்சாட்டுகள் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், உத்தராகண்ட் முன்னாள் முதல்வர் ஹரிஷ் ராவத் காங்கிரஸ் கட்சியின் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
ஹரிஷ் ராவத்தின் உதவியாளராக உள்ள சந்தன் சிங் ஜீனாவுக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரூ.32 லட்சம் மற்றும் தங்கம் பறிமுதல்?
கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற மாநில அளவிலான ஆட்தேர்வு முறைகேடு தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக இந்த சோதனை நடைபெற்றதாக கூறப்படுகிறது. சோதனையின்போது ரூ.32 லட்சம் ரொக்கம், 200 கிராம் தங்கம் மற்றும் விலை உயர்ந்த 12 கடிகாரங்கள் கைப்பற்றப்பட்டதாக அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹரிஷ் ராவத் முதல்வராக இருந்த காலகட்டத்தில் சந்தன் சிங் ஜீனா சிறப்பு பணி அதிகாரியாக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
‘உண்மை வெளிவரும்’
இந்த விவகாரம் குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட ஹரிஷ் ராவத், குற்றச்சாட்டுகளின் பின்னணியில் உள்ள உண்மை வரும் நாட்களில் வெளிவரும் என்று தெரிவித்துள்ளார்.
தனது உதவியாளர் கடின உழைப்பாளி என்றும், அவர் முறைகேட்டில் ஈடுபட்டிருப்பார் என்று நம்பவில்லை என்றும் கூறியுள்ளார். அதே நேரத்தில், ஊழலுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி போராடி வரும் சூழலில், இந்தக் குற்றச்சாட்டுகள் கட்சியின் செயல்பாடுகளை பாதிக்கக்கூடாது என்பதற்காக தனது கட்சி பொறுப்பில் இருந்து விலகும் முடிவை எடுத்துள்ளதாக ஹரிஷ் ராவத் தெரிவித்துள்ளார்.
