ஐதராபாத்: தெலுங்கானாவில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியின் ஒரு பகுதியாக, தெலுங்கு திரையுலகின் பல முன்னணி பிரபலங்களுக்கு தேர்தல் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி, நடிகர்கள் விஜய் தேவரகொண்டா, மகேஷ் பாபு, வெங்கடேஷ், நடிகை சமந்தா ரூத் பிரபு மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.வி.எஸ்.லட்சுமண் உள்ளிட்டோருக்கு விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள சில தகவல்களில் எழுத்துப் பிழைகள் இருப்பது, பெற்றோர் பெயர்களில் முரண்பாடுகள் காணப்படுவது உள்ளிட்ட காரணங்களால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வாக்காளர் விவரங்களில் முரண்பாடு
முந்தைய வாக்காளர் பட்டியலில் இடம்பெற்ற தகவல்களையும் தற்போதைய விவரங்களையும் இணைத்து சரிபார்க்கும் பணியிலும் சில சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தெலுங்கானாவில் வாக்காளர் பட்டியலை முழுமையாக சரிபார்த்து, அதிலுள்ள தவறுகளை திருத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சந்தேகம் அல்லது முரண்பாடு காணப்படும் வாக்காளர் விவரங்கள் தொடர்பாக சம்பந்தப்பட்ட நபர்களிடம் விளக்கம் பெறும் நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே இந்த நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
