பெர்த்: இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. பெர்த்தில் நடைபெற்ற இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது.
2-வது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் வரும் 6-ம் தேதி தொடங்குகிறது. இந்த டெஸ்ட் பகல்-இரவு முறையில் நடைபெறும். இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர், ‘அவசர நிலை’ காரணமாக நேற்று அதிகாலை பெர்த்தில் இருந்து விமானம் மூலம் சொந்த ஊர் புறப்பட்டார். இதன் காரணமாக கான்பெராவில் வரும் 30-ம் தேதி தொடங்கும் 2 நாள் பிங்க்-பால் பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணியுடன் அவர் இருக்க மாட்டார்.
இதுகுறித்து பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறும்போது, ”நேற்று அதிகாலையில் கவுதம் கம்பீர் தனது குடும்பத்தினருடன் இந்தியா புறப்பட்டுச் சென்றார். இது தவிர்க்க முடியாத தனிப்பட்ட அவசரநிலை. “இரண்டாவது டெஸ்ட் தொடங்குவதற்கு முன்பு அவர் அடிலெய்டு திரும்புவார்,” என்றார்.