ராய்ப்பூர்: நக்சல் பயங்கரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள சத்தீஸ்கரில் நேற்று உயர்மட்ட பாதுகாப்பு கூட்டம் நடைபெற்றது. உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மாநில முதல்வர் விஷ்ணு தியோ சாய், துணை முதல்வர் விஜய் சர்மா, மத்திய உள்துறை செயலர் கோவிந்த் மோகன், சத்தீஸ்கர் தலைமைச் செயலர், காவல்துறை இயக்குநர் ஜெனரல் மற்றும் மத்திய ஆயுதப் படைகளின் (சிஏபிஎஃப்) இயக்குநர்கள் கலந்து கொண்டனர்.
சத்தீஸ்கரில் இடதுசாரி தீவிரவாதத்தின் (LWE) நிலைமை குறித்து கூட்டத்தில் மதிப்பீடு செய்யப்பட்டது. அப்போது பேசிய அமித் ஷா, “சத்தீஸ்கர் காவல்துறை மற்றும் பிற பாதுகாப்புப் படையினர் ஒருங்கிணைந்து நக்சலிசத்துக்கு எதிரான போராட்டத்தில் மிகச் சிறப்பாக செயல்பட்டு, கடந்த ஓராண்டில் நக்சல்களுக்கு அதிகபட்ச சேதத்தை ஏற்படுத்தியுள்ளனர். இது மிகப்பெரிய வெற்றியாகும். வலுவான பாதுகாப்பு நடவடிக்கைகளின் மூலம் நக்சலைட்டுகளின் மன உறுதியை உடைப்பதுடன், சிவில் உரிமைகள், வளர்ச்சிப் பணிகள் மற்றும் சிறப்புப் பொதிகள் மூலம் பாதிக்கப்பட்ட பகுதிகளின் மக்களை மோடி அரசு பிரதானப்படுத்துகிறது.
வரும் நாட்களில் சத்தீஸ்கர் நக்சலிசத்தில் இருந்து முற்றிலும் விடுபட்டு, வளர்ச்சிப் பணிகளில் நாட்டிலேயே முன்னணி மாநிலமாக மாறும். 2026 மார்ச்சுக்குள் இடதுசாரி தீவிரவாதத்தை முற்றிலுமாக ஒழிக்கும் இலக்கை அடைய அனைத்து சக்திகளும் ஏஜென்சிகளும் கூட்டு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இந்த முயற்சியில் தேசிய புலனாய்வு அமைப்பு மிக முக்கிய பங்கு வகிக்கும்” என்று ஷா கூறினார்.
முன்னதாக, அவர் பிஜப்பூர் மாவட்டத்தில் உள்ள பாதுகாப்பு படை தளத்தை பார்வையிட்டார். பாதுகாப்புப் படைகளின் செயல்பாட்டுத் தயார்நிலையையும் அவர் ஆய்வு செய்தார். சிஆர்பிஎஃப், ஐடிபிபி, பிஎஸ்எஃப், சத்தீஸ்கர் காவல்துறை மற்றும் மாவட்ட ரிசர்வ் காவலர் (டிஆர்ஜி) ஆகியவை இணைந்து சத்தீஸ்கரில் நக்சல் பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வருகின்றன.