புதுடெல்லி: உலகின் மிக உயரமான சிகரமான எவரெஸ்ட், நேபாளத்தின் இமயமலைப் பகுதியில் உள்ள சாகர்மாதா தேசிய பூங்காவில் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில், உலகம் முழுவதிலுமிருந்து ஏராளமான மலையேறுபவர்கள் நேபாளம் வழியாக எவரெஸ்ட் சிகரத்தை ஏறுகிறார்கள். இந்த சீசனில் ஒரு நபருக்கு ரூ.9.51 லட்சம் வசூலிக்கப்பட்டது.
தற்போது, கட்டணம் ஒரு நபருக்கு ரூ. 12.96 லட்சம் நிர்ணயிக்கப்படுள்ளது. இது 36 சதவீதம் கட்டண உயர்வாகும். செப்டம்பர் முதல் நவம்பர் வரை எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவதற்கான கட்டணம் ரூ. 6.48 லட்சம் மற்றும் டிசம்பர் முதல் பிப்ரவரி வரை சிகரம் ஏற ரூ. 3.02 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. நேபாள அரசு வட்டாரங்கள் கூறுகையில், “நேபாள அரசின் மொத்த வருவாயில் 4 சதவீதம் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவதற்கு வசூலிக்கப்படும் கட்டணத்தில் இருந்து வருகிறது. பல ஆண்டுகளுக்குப் பிறகு கட்டணத்தை உயர்த்தியுள்ளோம்.
இதனால் மலையேற்ற வீரர்களின் எண்ணிக்கை குறையாது. புதிய கட்டண உயர்வு, ஜனவரி முதல் அமலுக்கு வந்துள்ளது,” என்றனர். பிரிட்டனை சேர்ந்த மலையேற்ற வீரர்கள் கென்டன் கூறியதாவது:- சீனாவின் திபெத் வழியாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறலாம். ஆனால் மலைப்பாதை மிகவும் செங்குத்தானது. அந்த வழியாக உச்சியில் ஏற முடியாது. நேபாளம் வழியாகத்தான் எவரெஸ்ட் சிகரத்தில் ஏற முடியும். சாகசத்திற்காக பலர் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுகிறார்கள். இதற்காக ஒவ்வொருவரும் பல லட்சங்கள் செலவிடுகிறார்கள்.
நேபாள அரசின் கட்டண உயர்வு மலையேறுபவர்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. கடந்த ஆண்டு நேபாள அரசு எவரெஸ்ட் மலையில் இருந்து 119 டன் குப்பைகளை அகற்றியது. மேலும், மலை ஏறும் போது உயிரிழந்த 14 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. நேபாள அரசு இது போன்ற வேலைகளுக்கு நிறைய பணம் செலவழிக்க வேண்டியுள்ளது. எனவே, கட்டண உயர்வு தவிர்க்க முடியாதது. இவ்வாறு கென்டன் கூறினார்.