ஐதராபாத்: ஆந்திராவின் கிருஷ்ணா மற்றும் கோதாவரி மாவட்டங்களில் கடந்த மாதம் ஆயிரக்கணக்கான பண்ணை கோழிகள் இறந்தன. பறவைக் காய்ச்சல்தான் இதற்குக் காரணம் என ரத்தப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த மாவட்டங்களில் பண்ணை கோழிகள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து தமிழகம், கர்நாடகா, தெலங்கானா ஆகிய மாநிலங்களிலும் ஆந்திர கோழிகள் விற்பனை செய்யப்படவில்லை. இதனால் கோழி வியாபாரத்தில் பெரும் நஷ்டம் ஏற்பட்டது.
ஆந்திரா கோழிகள் தெலுங்கானாவுக்குள் நுழைவதை தடுக்க தெலுங்கானா மாநில எல்லையில் 24 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டன. ஆனால், தெலுங்கானா மாநில எல்லையில் உள்ள கம்மம் மாவட்டத்தில் கடந்த மாதம் பறவைக் காய்ச்சல் பரவியது. இதைத் தொடர்ந்து வாரங்கல், நல்கொண்டா, சூர்யாபேட்டை, மேதக் உள்ளிட்ட மாவட்டங்களில் பறவைக் காய்ச்சலுக்கு பண்ணைக் கோழிகளின் இறப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதனால் தெலுங்கானா மக்களும் கோழி இறைச்சி சாப்பிடுவதை தவிர்த்து வந்தனர். இந்நிலையில், நேற்று சங்காரெட்டி, மேதக் மாவட்டங்களில் பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 8 ஆயிரம் பண்ணை கோழிகள் பரிதாபமாக உயிரிழந்தன. இதனால், மக்கள் பீதியடைந்துள்ளனர். இந்த பகுதிகளில் கோழி இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இறந்த கோழிகளின் ரத்தம் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.