கடலூர்: திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் நடைபெற்று வரும் வைகாசி பெருவிழாவின் 12ஆம் நாள் நிகழ்ச்சியாக திருஞானசம்பந்தர் ஞானப்பால் உண்ட ஐதீக விழா சிறப்பாக நடைபெற்றது.
திருஞானசம்பந்தர் குழந்தைப் பருவத்தில் பசியால் அழுதபோது அம்பாள் நேரில் தோன்றி ஞானப்பால் புகட்டியதாக கூறப்படும் ஐதீகத்தை நினைவுகூரும் வகையில் இந்த விழா நடத்தப்பட்டது.
இதையொட்டி பாடலீஸ்வரர், பெரியநாயகி அம்மன் மற்றும் 63 நாயன்மார்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
பின்னர் சிவகர தீர்த்தக் குளத்தில் குழந்தை ஒருவரை திருஞானசம்பந்தராக பாவித்து ஞானப்பால் வழங்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் ரிஷப வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.