ஐதராபாத்: நடிகர் பிருத்விராஜ் நடிப்பில் வெளியான ‘கலிபா’ திரைப்படம் 3 நாட்களில் ரூ.30 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
வைசாக் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஆகஸ்ட் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. பிருத்விராஜுடன் அர்ஜுன் தாஸ், ஷைன் டாம் சாக்கோ உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார். படத்தின் கதையை ஜினு ஆபிரகாம் எழுதியுள்ளார்.
பழிவாங்கும் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு லண்டன், துபாய், நேபாளம், கேரளா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்றது. தங்கக் கடத்தலை பின்னணியாகக் கொண்ட கதையில் பிருத்விராஜ் மற்றும் கேங்ஸ்டர் இடையேயான மோதலை மையமாக வைத்து படம் உருவாக்கப்பட்டுள்ளது.
நடிகர் மோகன்லால் இப்படத்தில் மாஃபியா டான் கதாபாத்திரத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
இந்நிலையில், ‘கலிபா’ திரைப்படம் வெளியான மூன்று நாட்களில் ரூ.30 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
