சென்னை: நடிகை நயன்தாரா மொட்டை தலையுடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்ததாக சமூக வலைதளங்களில் பரவி வரும் புகைப்படங்கள் போலியானவை என தெரியவந்துள்ளது.
‘டாக்ஸிக்’ திரைப்படம் வெற்றி பெற வேண்டி நயன்தாரா மொட்டை அடித்துக் கொண்டதாக கூறி இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வந்தன. ஆனால் கடந்த ஏப்ரல் மாதம் கணவர் விக்னேஷ் சிவனுடன் நயன்தாரா திருப்பதி சென்றபோது எடுக்கப்பட்ட அசல் புகைப்படம் தற்போது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் மாற்றப்பட்டுள்ளது.
அசல் புகைப்படத்தில் இருந்த நயன்தாராவின் தலைமுடியை மட்டும் நீக்கி, மொட்டை தலையுடன் இருப்பது போன்ற தோற்றத்தை உருவாக்கியுள்ளனர். முகம் மற்றும் உடை உள்ளிட்டவை அசல் புகைப்படத்தைப் போலவே இருப்பதால், பலரும் முதல் பார்வையில் இது உண்மையான புகைப்படம் என நம்பியுள்ளனர்.
‘டாக்ஸிக்’ படத்தில் யாஷின் சகோதரி கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்துள்ளதாக கூறப்படுகிறது. கியாரா அத்வானி, ஹூமா குரேஷி, ருக்மணி வசந்த் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். ‘டாக்ஸிக்’ திரைப்படம் ஆகஸ்ட் 26-ம் தேதி வெளியாக உள்ள நிலையில், நயன்தாராவின் போலி மொட்டை புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
