டெல்லி: சட்டவிரோதமான சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்தியதாக எழுந்த புகாரில் நடிகை நிதி அகர்வாலிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் சுமார் 4 மணி நேரம் விசாரணை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
தொழிலதிபர் ஃபனீந்திர சர்மா அளித்த புகாரின் அடிப்படையில் நடிகர்கள் பிரகாஷ் ராஜ், ராணா டகுபதி, விஜய் தேவரகொண்டா, நிதி அகர்வால் உள்ளிட்ட 21 பேர் மீது ஹைதராபாத் மியாபூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய நிதி அகர்வால் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
அதன்படி ஹைதராபாத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நிதி அகர்வால் நேரில் ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் சுமார் 4 மணி நேரம் விசாரணை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்துவது சட்டரீதியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது தனக்குத் தெரியாது என்றும், அவற்றை விளம்பரப்படுத்தியதற்காக வருந்துவதாகவும் நிதி அகர்வால் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இனிவரும் காலங்களில் இதுபோன்ற சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்த மாட்டேன் என்றும் அவர் உறுதியளித்ததாக கூறப்படுகிறது.
