சென்னை: விஜய் ஆண்டனி மற்றும் இயக்குநர் சசி கூட்டணியில் உருவாகியுள்ள ‘நூறு சாமி’ திரைப்படத்தின் டிரெய்லர் ஜூன் 8-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
இசையமைப்பாளராக தனது திரைப்பயணத்தைத் தொடங்கிய விஜய் ஆண்டனி, பின்னர் நடிகராகவும் வெற்றிகரமான பயணத்தை மேற்கொண்டார். குறிப்பாக இயக்குநர் சசி இயக்கத்தில் வெளியான ‘பிச்சைக்காரன்’ திரைப்படம் அவருக்கு பெரும் வரவேற்பைப் பெற்றுத்தந்தது.
இந்த வெற்றிக் கூட்டணி தற்போது ‘நூறு சாமி’ திரைப்படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளது. உணர்வுப்பூர்வமான கதைக்களத்துடன் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு, ‘பிச்சைக்காரன்’ படத்தில் இடம்பெற்ற பிரபலமான பாடலின் வரியை நினைவூட்டும் வகையில் ‘நூறு சாமி’ என பெயரிடப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் விஜய் ஆண்டனியுடன் அஜய் திஷான், சுவாசிகா, லிஜோ மோல் ஜோஸ், கருணாஸ் மற்றும் காவ்யா அனில் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்டிருந்தார். மேலும் ‘மாய கனவோ’, ‘அம்மா அம்மாதான்’, ‘ரீங்காரா’ உள்ளிட்ட பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.
‘நூறு சாமி’ திரைப்படத்திற்கு தணிக்கை வாரியம் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இந்நிலையில், படத்தின் டிரெய்லர் ஜூன் 8-ஆம் தேதி வெளியாகும் என்றும், திரைப்படம் ஜூன் 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்றும் படக்குழு அறிவித்துள்ளது.