சென்னை: வாலிபால் விளையாட்டை மையமாகக் கொண்டு உருவாகும் ‘அட்டாக்கர்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் அறிமுக வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
அறிமுக இயக்குநர் தாமோ நாகபூஷ்ணம் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘அட்டாக்கர்’. இயக்குநர் பா. இரஞ்சித்திடம் இணை இயக்குநராக பணியாற்றிய அனுபவம் கொண்ட அவர், இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
சினிமா மீடியா அண்ட் என்டேர்டெயின்மெண்ட் லிமிடெட் சார்பில் தயாரிப்பாளர் தினேஷ் ராஜ் இந்தப் படத்தை தயாரித்துள்ளார். இந்நிறுவனத்தின் மூன்றாவது தயாரிப்பாக உருவாகும் ‘அட்டாக்கர்’, உள்ளடக்கத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் படைப்பாக உருவாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் வாலிபாலை பிரதான கருவாகக் கொண்டு உருவாகும் முதல் திரைப்படம் என்ற பெருமையையும் ‘அட்டாக்கர்’ பெற்றுள்ளது. விளையாட்டு, உணர்வு, சமூக பின்னணி மற்றும் கலாச்சார அடையாளங்களை இணைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
படத்தில் கதாநாயகர்களாக பவிஷ் மற்றும் அவந்திகா சுந்தர் நடித்துள்ளனர். நடிகை குஷ்பு சுந்தர் மற்றும் நடிகர்-இயக்குநர் சுந்தர் சி ஆகியோரின் மகளான அவந்திகா சுந்தர், இந்தப் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.
மேலும், இந்தியாவின் முன்னணி வாலிபால் வீரர்கள் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நடிகர்கள் தொழில்முறை வாலிபால் பயிற்சியாளர்களுடன் ஆறு மாதங்களுக்கும் மேலாக பயிற்சி பெற்றுள்ளனர்.
இந்நிலையில் ‘அட்டாக்கர்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் அறிமுக வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.