ஆம்ஸ்டெல்வீன்: ஹாக்கி உலகக்கோப்பை போட்டியில் சீனாவுக்கு எதிரான ஆட்டத்தை இந்திய மகளிர் அணி 2-2 என்ற கோல் கணக்கில் டிரா செய்தது.
நெதர்லாந்தின் ஆம்ஸ்டெல்வீனில் நடைபெற்ற போட்டியின் 9-வது நிமிடத்தில் நவ்நீத் கோல் அடித்து இந்தியாவை முன்னிலை பெறச் செய்தார். 15-வது நிமிடத்தில் சீனாவின் ஷாங் யிங் பதில் கோல் அடித்தார்.
26-வது நிமிடத்தில் தீபிகா கோல் அடித்ததால் முதல் பாதி முடிவில் இந்தியா 2-1 என முன்னிலையில் இருந்தது. இரண்டாவது பாதியில் 39-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை சீனாவின் மா நிங் கோலாக மாற்றியதால் ஆட்டம் 2-2 என சமநிலையானது.
மீதமுள்ள நேரத்தில் இரு அணிகளும் கோல் அடிக்க முயன்றாலும், இந்திய வீராங்கனைகள் சீனாவின் தாக்குதல்களை சிறப்பாக தடுத்தனர். இறுதியில் போட்டி டிராவில் முடிந்தது. இந்திய அணி வரும் 18-ம் தேதி தென்ஆப்ரிக்காவையும், 20-ம் தேதி இங்கிலாந்தையும் எதிர்கொள்கிறது.
