கர்நாடக மாநிலம் ஹுப்ளியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த கொடூர சம்பவம் அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்தது. வீட்டு வேலை செய்யும் பெண் ஒருவரின் 5 வயது மகள் வீட்டு வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது, பிகாரைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளி ரித்தேஷ் குமார் சாக்லேட்டைக் காட்டி அந்த சிறுமியை கடத்திச் சென்றார். சில நிமிடங்களில் அந்த சிறுமி அருகிலுள்ள இடத்தில் சடலமாகக் காணப்பட்டார். இது பெரும் பதற்றத்தை ஏற்படுத்த, பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிசிடிவி காட்சியின் உதவியுடன் ரித்தேஷை கைது செய்த போலீசார், விசாரணைக்காக அவரை அவரது தங்குமிடத்துக்கு அழைத்துச் சென்றனர். அப்போது போலீசாரை தாக்கி தப்பி ஓட முயன்ற ரித்தேஷை, பலமுறை எச்சரித்தும் அவர் தாக்குதலைத் தொடர்ந்ததால், காவலர்கள் சுட ஆரம்பித்தனர். இதில் காவல் உதவி ஆய்வாளர் அன்னபூர்ணா காயமடைந்தார். அன்னபூர்ணா வானத்தை நோக்கி எச்சரிக்கை சுட்டதும், சரணடையும்படி கூறியும் ரித்தேஷ் வரவில்லை. இறுதியில் அவரது கால்கள் மற்றும் முதுகில் சுட்டதில் ரித்தேஷ் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் முழுக்க பெண் உதவி ஆய்வாளராக பணியாற்றும் அன்னபூர்ணாவின் துணிச்சலுக்கு நாடு முழுவதும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. விவசாயக் குடும்பத்தில் பிறந்த அன்னபூர்ணா, சிறு வயதிலேயே தந்தையை இழந்தும், விடாமுயற்சியுடன் MSc வரை கல்வி கற்று, 2018-ல் காவல் தேர்வில் வெற்றி பெற்று உதவி ஆய்வாளராக பணியில் சேர்ந்தவர்.
தற்போது காயத்துடன் ஹுப்ளி கிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அன்னபூர்ணா, குற்றவாளியை ஒரே நாளில் கைது செய்ததோடு தப்பிக்க முயன்ற அவரை தைரியமாக எதிர்கொண்டு சுடும் தீர்மானம் எடுத்துள்ளார். இவரது செயலுக்கு காவல்துறை மற்றும் பொதுமக்கள் இருபுறத்திலும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.