பெங்களூர்: தடையை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி பெங்களூருவில் ‘பைக் டாக்சி’ ஓட்டுநர்கள் பேரணி நடத்தினர்.
கர்நாடகத்தில் ஓலா, ஊபர், ரேபிடோ உள்ளிட்ட தனியார் டாக்சி நிறுவனங்கள் பைக் டாக்சி சேவையை வழங்கி வருகின்றன.
பெங்களூருவில் மட்டும் சுமார் 1.20 லட்சம் பைக் டாக்சிகள் பதிவு செய்யப்பட்டு இயக்கப்பட்டு வந்தன. பைக் டாக்சியால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக குற்றம் சாட்டிய ஆட்டோ டிரைவர்கள் பைக் டாக்சி சேவைக்கு தடை விதிக்குமாறு கோரி தீவிர போராட்டம் நடத்தினர்.
இதனையடுத்து, கர்நாடக அரசு, இந்த பைக் டாக்சி சேவைக்கு தடை விதித்து உத்தரவிட்டது. இதனால் கர்நாடகத்தில் பைக் டாக்சி சேவை முடிவுக்கு வந்துள்ளது. இதன் காரணமாக பைக் டாக்சி சேவையை வழங்கிய 1.20 லட்சம் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் அதை நம்பி இருந்த மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.
இந்நிலையில், கர்நாடகாவில் தடை செய்யப்பட்டுள்ள பைக் டாக்ஸி சேவையை மீண்டும் அனுமதிக்கக் கோரி 8 மாவட்டங்களைச் சேர்ந்த 5,000க்கும் மேற்பட்ட பைக் டாக்ஸி ஓட்டுநர்கள் பெங்களூருவில் பேரணி நடத்தினர்.
மைசூரு, மண்டியா, ஹாசன், தாவணகெரே, தும்கூர், ராமநகரா, சிவமொக்கா மற்றும் கனகபுரா உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த பைக் டாக்ஸி ஓட்டுநர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.