டெல்லி: பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர், நவ., 26-ல் துவங்குகிறது. இந்த கூட்டம், டிச.,20 வரை நடக்க உள்ளது. குளிர்கால கூட்டத்தொடர் துவங்கும் முன், மணிப்பூர் கலவரம், அதானி பிரச்னை குறித்து, கேள்வி எழுப்புவோம் என, எதிர்க்கட்சிகள் தெரிவித்தன. கடந்த திங்கட்கிழமை குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்தே, அதானி விவகாரம் மற்றும் சம்பல் பகுதியில் உள்ள மசூதியில் ஆய்வின் போது ஏற்பட்ட வன்முறை குறித்து உடனடியாக விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் கோஷங்களை எழுப்பி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
ஆனால், கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்து மத்திய அமைச்சர்கள் யாரும் அதானி விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகளுடன் விவாதிக்க தயங்கவில்லை. இதனால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. இதனால் கடந்த 3 நாட்களாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் மக்களவை, ராஜ்யசபா ஆகிய இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.
இந்நிலையில் இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கூடியது. அப்போது, அதானி விவகாரம், வக்பு வாரியத் திருத்தச் சட்டம், மணிப்பூர் வன்முறை, சம்பல் பகுதியில் மசூதி ஆய்வின்போது நடந்த வன்முறை உள்ளிட்ட பிரச்னைகளை எழுப்பி எதிர்க்கட்சிகள் ராஜ்யசபாவில் அமளியில் ஈடுபட்டன. இதையடுத்து, ராஜ்யசபா நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படுவதாக அவைத் தலைவர் ஜக்தீப் தன்கர் அறிவித்தார்.
அதன்படி, ராஜ்யசபா, டிச., 2-ம் தேதி காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதேபோல், எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், மக்களவை 12 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக பேரவைத் தலைவர் ஓம் பிர்லா அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.