திருமலை: ஆந்திராவின் திருமலையில் மத பிரச்சாரம், பிரார்த்தனை, ஆர்ப்பாட்டங்கள், தர்ணாக்கள், பொதுக்கூட்டங்கள் போன்றவை முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளன. அலிபிரி சோதனைச் சாவடியில் முழுமையாக சோதனை செய்யப்பட்ட பின்னரே அனைத்து வாகனங்களும் திருமலைக்குள் நுழைய அனுமதிக்கப்படுகின்றன. பிற மதங்கள் மற்றும் அரசியல் கட்சிகளைச் சேர்ந்த ஸ்டிக்கர்கள், படங்கள் அல்லது கட்சிக் கொடிகள் கொண்ட வாகனங்கள் திருமலைக்குள் நுழைய அனுமதிக்கப்படாது.
ஆபரேஷன் சிந்தூர்க்குப் பிறகு திருமலையிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், நேற்று, திருமலையில் உள்ள ‘கல்யாண வேதிகா’ என்ற மண்டபம் அருகே, தலையில் தொப்பி அணிந்த ஒருவர் வெளியில் இருந்து பக்தர்களிடம், “நான் இங்கே பிரார்த்தனை செய்ய விரும்புகிறேன். அதற்கு பொருத்தமான இடம் எங்கே?” என்று கேட்டார். யாரும் பதிலளிக்காததால், அவர் ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்து சுமார் 10 நிமிடங்கள் பிரார்த்தனை செய்தார்.

இவை அனைத்தும் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளன. அதன் பிறகு, அந்த நபர் பிரார்த்தனையை முடித்துவிட்டு, தமிழ்நாடு பதிவு எண் கொண்ட காரில் அமர்ந்தார். அப்போது, ஒருவர் அவரிடம், “இங்கே பிரார்த்தனை செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது. ஆனால் நீங்கள் அதை மீறி பிரார்த்தனை செய்துள்ளீர்கள்” என்று கூறினார். அந்த நபர் அது குறித்து தனக்குத் தெரியாது என்று அலட்சியமாக பதிலளித்தார்.
இது குறித்து அறிந்ததும், திருப்பதி தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் அந்த நபரை விசாரணைக்கு அழைத்துச் சென்று திருமலை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கு போலீசார் அவரை விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் அவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. அவர் யார்? அவர் ஏன் திருமலைக்கு வந்தார்? தடையை மீறி பிரார்த்தனை செய்தது ஏன்? போலீசார் விசாரித்து வருகின்றனர்.