சென்னை: தமிழகத்தின் மலைப்பகுதிகளில் மழைக்காலங்களில் ஏற்படும் நிலச்சரிவு அபாயத்தை குறைக்கும் வகையில், மத்திய அரசிடம் இருந்து நிதி பெற தமிழக அரசு நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது.
நீலகிரி, தேனி, திண்டுக்கல், சேலம் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் மலைப்பகுதி சாலைகள் மற்றும் அதிக சாய்வு கொண்ட பகுதிகளில் நிலச்சரிவு அபாயம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் நிலச்சரிவு பிரச்சினை தொடர்ந்து காணப்படும் நிலையில், பிற மாவட்டங்களிலும் மலைப்பகுதிகளில் அபாயம் அதிகரித்து வருவதாக அரசு தரப்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
நிலச்சரிவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் முக்கியமானதாக தடுப்புச் சுவர் அமைத்தல், மண் சரிவை கட்டுப்படுத்தும் தொழில்நுட்பங்களை பயன்படுத்துதல் மற்றும் அதிக சாய்வு உள்ள பகுதிகளை அடையாளம் காணுதல் ஆகியவை உள்ளன.
தமிழக பேரிடர் மேலாண்மை திட்ட ஆவணத்திலும், நீலகிரி மட்டுமின்றி தேனி, திண்டுக்கல், சேலம், திருப்பத்தூர் ஆகிய மலைப்பகுதிகளில் நிலச்சரிவு தொடர்பான புதிய அபாயங்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் தேசிய பேரிடர் மேலாண்மை நிதியின் கீழ் நிலச்சரிவு மற்றும் நில அதிர்வு அபாயங்களை குறைப்பதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, முக்கிய மலைப்பாதைகளில் தடுப்புச் சுவர் உள்ளிட்ட பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள தேவையான நிதியை பெறுவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
