சென்னை: தமிழக விவசாயிகள் எதிர்நோக்கும் நெல் கொள்முதல் பிரச்சனை குறித்து அதிமுக பொதுச்செயலாளர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். திமுக அரசின் நிர்வாகக் குளறுபடிகள் காரணமாக, விவசாயிகளுக்கு இவ்வாண்டு “கண்ணீர் தீபாவளி” என மாறிவிட்டதாக அவர் கூறியுள்ளார்.
அவரது அறிக்கையில், பருவமழை பெய்து வரும் நேரத்தில் நெல் கொள்முதல் மந்தமாக நடைபெறுவதால், விவசாயிகள் உற்பத்தி செய்த நெல்மணிகள் மழையில் நனைந்து முளைத்து வீணாகின்றன என்றும், இதனால் பலரும் பெரும் நஷ்டத்தைச் சந்தித்து வருகிறார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். அதிமுக ஆட்சியில் தினமும் 1,000 மூட்டைகள் வரை நெல் கொள்முதல் செய்யப்பட்டது; 17 சதவீத ஈரப்பதம் 22 சதவீதமாக உயர்த்தி மத்திய அரசின் அனுமதி பெற்றோம் என அவர் கூறினார். ஆனால் திமுக ஆட்சியில் தற்போது தினமும் 600 மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்யப்படுகின்றன எனவும், தேவையான சாக்குப் பைகள் மற்றும் தார்ப்பாய்கள் இல்லாமை விவசாயிகளின் துயரத்தை அதிகரித்துள்ளதாகவும் கூறினார்.

மேலும், திமுக அரசு விவசாயிகள் உற்பத்தி செய்த நெல்மணிகளை பாதுகாப்பாக கொள்முதல் செய்யத் தவறிவிட்டதாகவும், இதனால் டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட பல இடங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெற்பயிர்கள் வீணாகி வருகின்றன என்றும் பழனிசாமி குற்றம்சாட்டினார். மழையில் நனைந்து நெல் மூட்டைகள் கெட்டு வருகின்றன; இதைக் கண்டு விவசாயிகள் சாலை மறியல், பஸ் மறியல் போன்ற போராட்டங்களில் ஈடுபடுகிறார்கள் என்றார்.
“திமுக அரசின் அலட்சியத்தால் விவசாயிகள் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். உடனடியாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அதிகரித்து, தினசரி கொள்முதல் அளவை 1,000 மூட்டைகளாக உயர்த்த வேண்டும். மேலும் 22 சதவீத ஈரப்பதம் வரை நெல்லை கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும்,” என வலியுறுத்திய எடப்பாடி பழனிசாமி, திமுக அரசு இச்சிக்கலை புறக்கணித்தால் மாபெரும் விவசாயிகள் போராட்டம் வெடிக்கும் என்று எச்சரித்தார்.