சென்னை: அடுத்த 5 நாட்களுக்கு கனமழை… தமிழகத்தில் கோடை வெப்பம் வாட்டி வதைத்து வரும் நிலையில், மக்களுக்குக் குளிர்ச்சியான செய்தியை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான அறிகுறிகள் தென்படுவதால், அடுத்த ஐந்து நாட்களுக்குத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு சற்று முன்னதாகவே அந்தமான் நிகோபார் தீவுப் பகுதிகளில் மே 16-ம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதன் தாக்கத்தால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்யத் தொடங்கியுள்ளது. அடுத்த ஐந்து நாட்களுக்கு தமிழகத்தில் பல மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (மே 15): கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
மே 16: நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் கனமழை தொடர வாய்ப்புள்ளது.