பூமிக்கு 400 கி.மீ. உயரத்தில் சுற்றிக்கொண்டிருக்கும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையம், நாளை முதல் (ஜூலை 5) தொடங்கி ஜூலை 12 வரை இந்தியா முழுவதும் பல நகரங்களில் இருந்து வெறும் கண்ணால் காணக்கூடியதாக இருக்கும் என்று நாசா அறிவித்துள்ளது. இதில் தமிழகம் உட்பட பல மாநிலங்களை சேர்ந்தோர் இந்த அரிய தருணத்தை அனுபவிக்க முடியும்.
1998 ஆம் ஆண்டு இருந்து செயலில் உள்ள இந்த விண்வெளி நிலையம், அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பா, ஜப்பான் மற்றும் கனடா ஆகிய நாடுகளின் ஒத்துழைப்பில் இயங்குகிறது. தற்போது இதில் இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உள்பட நான்கு பேர் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர் அமெரிக்காவின் பெக்கி விட்சன், ஹங்கேரியின் திபோர் கபு, போலந்தின் ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி ஆகியோருடன் இணைந்து ஆய்வு செய்கிறார்.

இந்த மையம் தினமும் 16 முறை பூமியை சுற்றுவதால், சில நேரங்களில் அது சூரிய ஒளியின் பிரதிபலிப்புடன் விண்ணில் பளிச்சென்று தெரியும். நாளை ஜூலை 5-ஆம் தேதி காலை 5 மணியளவில் வங்கதேசம் அருகே உள்ள இந்திய எல்லைப் பகுதிகளில் முதலாக காட்சியளிக்கிறது. அதே நாள் இரவு 8 மணி முதல் 8.06 மணி வரை சென்னை, கோவை, மதுரை, திருச்சி, பெங்களூர், ஐதராபாத், விசாகப்பட்டினம் போன்ற நகரங்களில் தெரியும். ஜூலை 10ஆம் தேதி இரவு 9.38 முதல் 9.41 மணி வரை பாகிஸ்தான் எல்லை அருகே காணக்கூடியது. அதே நாளில் காலை 4.58 முதல் 5.06 மணி வரை மீண்டும் சென்னையிலும் காணலாம்.
இது வெறும் ஒரு அல்லது இரண்டு நொடியே தெரியும் அபூர்வ நிகழ்வாகும். அதனால் முன்னதாகவே நேரத்தைப் பார்த்து, தெற்கு மேற்கு திசை போன்ற இடங்களில் திறந்த வெளியில் இருந்து அவதானிக்குமாறு விஞ்ஞானிகள் பரிந்துரை செய்கின்றனர். பயணம் முடிந்ததும், பயணிகள் க்ரூ டிராகன் C213 மூலம் பூமிக்கு திரும்புவார்கள். சுமார் 17–20 மணி நேர பயணத்திற்கு பிறகு அவர்கள் பூமியைக் தொட்டடைவார்கள்.