ஊட்டி: கண்காட்சியை முன்னிட்டு 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலர் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் நிலவும் இயற்கை அழகினையும், அங்குள்ள சுற்றுலா தலங்களையும் கண்டு ரசிக்க ஆண்டுதோறும் சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் இருப்பர். அதிலும் குறிப்பாக ஏப்ரல், மே மாதங்களில் கோடைவிடுமுறையை கொண்டாட லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் குடும்பம் குடும்பமாக ஊட்டிக்கு வருவார்கள்.
அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக நீலகிரியில் மலர் கண்காட்சி, வாசனை திரவிய கண்காட்சி, ரோஜா கண்காட்சி, பழ கண்காட்சி என பல்வேறு விதமான கோடை விழா கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு தற்போது கோடைவிடுமுறை தொடங்கி விட்டதால் கடந்த சில நாட்களாகவே நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மட்டுமின்றி அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். அவர்கள் நீலகிரியில் நிலவும் சீதோஷ்ண நிலையை அனுபவித்து ரசித்து கோடைவிடுமுறை உற்சாகத்துடன் கழித்து வருகின்றனர்.
கோடைவிழாவில் முக்கிய இடத்தை பெறுவது ஊட்டி தாவரவியல் பூங்காவில் நடக்க கூடிய மலர்க்கண்காட்சி தான். இந்த ஆண்டுக்கான மலர் கண்காட்சி விரைவில் தொடங்க உள்ள நிலையில் தற்போது அதற்கான முன்னேற்பாடு பணிகள் நடந்து வருகிறது.
கண்காட்சியை முன்னிட்டு 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலர் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளது. அதில் மேரிகோல்டு, பேன்சி, பிகோனியா, சால்வியா, டெய்சி, டாலியா போன்ற பல்வேறு வண்ண மலர்கள் பூத்து குலுங்குகின்றன. இவை அனைத்தும் கண்காட்சி மண்டபங்களில் அழகாக ஒழுங்குபடுத்தப்படவுள்ளது.
தற்போது பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக பூங்காவில் மலர் மாடங்கள் அமைக்கும் பணிகள், மலர் தொட்டிகள் அலங்காரம் செய்யும் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. இதுதவிர பூங்காவில் டைல்ஸ் பதிக்கும் மேம்பாட்டு பணிகளும் நடக்கிறது.
இதுமட்டுமின்றி, கோடைவிழாவுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் கண்களை கவரும் வகையில் லட்சக்கணக்கான மலர்கள் தயார் நிலையில் உள்ளன. அந்த மலர்களை பூங்கா ஊழியர்கள் தொடர்ந்து பராமரித்து வருகின்றனர். மேலும், பூங்காவின் முகப்பு பகுதியில் உள்ள குளம் செயற்கை நீரூற்றாக மாற்றப்பட்டு வருகிறது. இந்திய வரைபட வடிவமைப்பில் அமைந்துள்ள பகுதி மற்றும் படிக்கட்டுகளும் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன.
இந்த அனைத்து மேம்பாட்டு பணிகளும் விரைவில் நிறைவடையும் நிலையில், இந்த ஆண்டின் மலர்க் கண்காட்சி முந்தைய ஆண்டுகளை விட மிகச் சிறப்பாக அமையும் என்று தோட்டக்கலைத்துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.