தஞ்சாவூர், ஜன. 30: சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த முதியவருக்கு தஞ்சாவூர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு தில்லைஸ்தானத்தை சேர்ந்தவர் ரமேஷ் (62). கோயிலுக்கு பிரசாதம் தயார் செய்யும் சமையல் தொழிலாளியான இவர் கடந்த 2025, ஜனவரியில் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார். இது குறித்து திருவையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து ரமேஷை கைது செய்தனர்.
இது தொடர்பாக தஞ்சாவூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி ஜெ. தமிழரசி விசாரித்து ரமேஷூக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீட்டுத் தொகையாக அரசிடமிருந்து ரூ. 2 லட்சம் பெற்றுத் தரவும் நீதிபதி உத்தரவிட்டார்.